Sri Badri Narayana Perumal Temple (Thirumanimadakoyil), Thirunangur
ஶ்ரீ பத்ரி நாராயணப் பெருமாள் திருக்கோயில்
Sthala Mahātmyam
Hymned by Thirumangai Azhvar as 'Nandhaa Vilakke,' this shrine at Thirunangur is revered as the 32nd of the 108 Divya Desams. Over 2,000 years old and recently renovated, its sanctum beneath the Pranava vimanam enshrines Sri Badri Narayanar, seated east-facing with His foot upon a lotus and His consorts beside Him. Tradition holds that when Shiva, enraged, performed the Rudra thandava in eleven forms, Thirumal took eleven Badri Narayana forms, appeared before him, halted the dance and reunited the eleven Shiva forms here; the pacified Shiva stands as Sri Mathangeeswarar in a shrine opposite. Once called 'Palasavanam,' the area holds eleven Shiva temples and eleven hymned Perumal koils, of which Badri Narayanar is foremost, and his darshan is deemed equal to darshan of all. Each morning the sun's rays fall upon the Lord, who shines like an unfading lamp. The Chithirai Brahmotsavam and, above all, the 131-year-old Garuda Sevai on the day after Thai Amavasai, when eleven Divya Desa utsavars gather here, are its grand festivals.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; "நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்! நர நாராயணனே! கருமாமுகில்போல் எந்தாய் எமக்கே அருளாயெனநின்று இமையோர்பரவுமிடம் எத்திசையும் கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களிவண்டு மிழற்ற நிழல்துதைந்து மந்தாரம் நின்று மணமல் நாங்கூர் மணிமாடக்கோவில் வணங்கு என்மனனே" என, திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்திருக்கோயில், 108- திவ்ய தேசங்களில் 32-வது வைணவத்திருத்தலமாகும். சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள இந்த வைணவ திருத்தலத்தின் பிரணவ விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் நம் வேங்கடவன், தேவியர் இருபுறமும் உடனிருக்க ஸ்ரீ பத்ரி நாராயணராக கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் (தாமரைமலர் மீது தன் திருவடியை வைத்தபடி) அருட்காட்சியளிக்கிறார். ஒரு புராண வரலாற்று நிகழ்வின்படி; கோபத்தால், 11 சிவ வடிவங்களில் ருத்ர தாண்டவம் ஆடிய நம் ஈசனை சாந்தப்படுத்த, நம் திருமால் பத்ரி நாரயணராக 11 வடிவங்கள் எடுத்து, ஈசனின் முன் தோன்றி அவரின் ருத்ர தாண்டவத்தினை நிறுத்தி, 11 சிவ வடிவங்களையும் ஒன்றுபடுத்திய இடம்தான் இந்த திருநாங்கூர் என்கிறது தலவரலாறு. (திருமால் சாந்தப்படுத்திய சிவபெருமான், ஸ்ரீ மதங்கீஸ்வரர் எனும் திருப்பெயருடன், இந்த சிறப்புமிகு வைணவ திருத்தலத்தின் எதிரே தனிக்கோயில் கொண்டிருக்கிறார்) ஆதிகாலத்தில், 'பலாசவனம்' என்றழைக்கப்பட்ட இந்த திருநாங்கூர் மணிமாடக்கோயில் பகுதியினைச்சுற்றி, (பிரசித்தி பெற்ற 11-சிவாலயங்கள் மற்றும்) மங்களாசாசனம் செய்யப்பட்ட 11-பெருமாள்கோவில்களும் உள்ளன. இதில், 11- பெருமாள்களுக்கும் இத்திருத்தலத்தின் பத்ரி நாராயணரே பிரதானமாக உள்ளார். இவரை தரிசித்தால், அனைவரையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். வருடத்தின் அனைத்து நாட்களிலும், காலை வேளையில் சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் இறைவனின்மீது படர்ந்து வழிபட்டுச்செல்வது காண்பதற்கரிய சிறப்பாகும். இதனாலேயே, சுவாமி எப்போதும் நந்தா (அணையாத) விளக்கு போல பிரகாசிப்பதால், திருமங்கையாழ்வார் தன் மங்களாசாசனத்தில் இத்தல இறைவனை "நந்தா விளக்கே" எனக் குறிப்பிட்டுள்ளார். தனி சன்னதியில், நம் தாயார் அமர்ந்த கோலத்தில் அழகுத்திருட்காட்சியளிக்கிறாள். (தேவியருடன் உற்சவர் ஸ்ரீ அளத்தற்கரியான் பேரழகாய் அருள்பாலிக்கின்றார்) திருமங்கையாழ்வார், இத்திருத்தலத்தின் 🙏🏻இறைவன், இறைவி இருவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளது மற்றுமொரு தலச்சிறப்பு. சித்திரையில், 10-நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா தலச்சிறப்புக்களில் ஒன்றாகும். மேலும், இந்த மணிமாடக்கோயிலின் பெரும் சிறப்பு மிக்க விழாவே ஒவ்வொரு ஆண்டும் தை மாத அமாவாசைக்கு மறுநாள 11-வைணவ திருத்தலங்களின் உற்சவர் சுவாமிகள் ஒரே இடத்தில், அதுவும் இந்த மணிமாடக்கோவில் தலத்தில், கலந்துகொள்ளும் கருடசேவை திருவிழாதான். (இந்த வருடத்துடன்) 131-ஆண்டுகளாக நடைபெறும் கருடசேவை உற்சவ விழா நாளில், எடுத்துவரப்படும் 11 திவ்ய தேச கோயில்களின் உற்சவர் பெருமாள்களுக்கு, திருமங்கையாழ்வார் பாசுரத்தால் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களாசாசனம் செய்யப்படும் நிகழ்வும், அதன்பின் திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் பாசுரத்தால் மங்களாசாசனம் செய்திடும் நிகழ்வும் காண கண்கொள்ளா பரவச திருக்காட்சியாகும். சிறப்பு மிக்க இந்த மஹா கருடசேவை நிகழ்வைக்காண, நமது தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல், நமது பாரதத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவர். இத்தல இறைதம்பதியரை உளமார வழிபட, கோபங்கள் குறையும் என்பதும், தோஷங்கள் விலகும் என்பதும், ராஜயோக பலன்கள் கிட்டும் என்பதும் நம்பிக்கை). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*






